Archive for the 'வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்கள்' Category

என் நாடக அனுபவங்கள்(பகுதி-2)

  பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு தொண தொணப்புக் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்). மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.

மீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது!!!(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).

2 Comments »

என் நாடக அனுபவங்கள்(பகுதி-1)

நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது ஒரு சிவ ராத்திரியன்று இரவு நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ்——(முழுப்பெயர் நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக்கொண்டனர்.அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர் வேடத்தில் நடித்தேன்.அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும்போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண்”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்களாம்.இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது .எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று...          (இன்னும் வரும்)

6 Comments »

சில சாத்தியங்கள்

நாட்டின் முன்னாள் முதற்குடிமகன் எல்லோரையும் கனவு காணச்சொல்கிறார்.எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது.ஆனால் எனக்கு ஒரு(!) கனவு இருந்ததில்லை.பல கனவுகள்?

1)என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது வெவ்வேறு வயதில் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நான் சென்றிருக்கக்கூடிய பாதைகளின் சாத்தியங்களைக் காட்டுகின்றன.

என் 7 வயதில் சாத்தூரில் பொதுத்தேர்தலின் போது கையில்  மெகா போனுடன்  வீதி வீதியாகச் சென்று காங்கிரஸ்  கட்சிக்காகத் தொண்டர்களுடன்  சேர்ந்து பிரசா  ரம் செய்தேன் .நாடாளுமன்றத்துக்கு திரு.காமராஜ் அவ்ர்களும்  சட்டப் பேரவைக்கு திரு.எஸ்.ஆர்.நாயுடு அவர்களும் போட்டியிட்டனர் .வெற்றி ஊர்வலத்தில் திரு.நாயுடு அவர்களுடன் மகிழ்வுந்தில் அருகில் அமர்ந்து சென்றேன்.சில தெருக்கள் சென்றபின் தொண்டர்கள் என்னை இறக்கி  ஹோட்டலுக்கு அழைத்து சென்று மைசூர்பாகும் தோசையும் வாங்கித்தந்தனர்.நான் இறங்கு முன் திரு.நாயுடு அவர்கள் என்னை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.

அன்று முதல் அந்தத்தொடர்புகள் விடாமல் ஒரு அரசியல் அஸ்திவாரம் எனக்கு அமைத்துத் த்ரப்பட்டிருந்தால் நான் என்னவாயிருப்பேன்?-அமைச்சர்?ஏன் அவ்வாறு நடக்கவில்லை?இழப்பு யாருக்கு???

2)சிவகாசியில் பள்ளியில் படிக்கும்போது பள்ளி நாடகங்களில் கதாநாயகனாக(ராஜபார்ட்)நடித்தேன்.மறக்கமுடியாத வேடம் ராஜ ராஜ நரேந்திரன்.நடிப்பின் காரணமாகவே   தமிழ் ஆசிரியருக்கும் பள்ளி மேலாளருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.பள்ளி வளாகத்தில் நடக்கும் கண்காட்சியிலும் நாடகத்தில் நடித்தேன்.எல்லோரும் என்னை “குட்டி நடிகர் திலகம்” என்றே அழைத்து வந்தனர்.வங்கியில் பயிற்சியில் இருந்த போது நண்பர் ஒருவர் ,ஒரு பிரபல நடிகர் ஒருவரின் பெயரைக்கூறி  அவரெல்லாம் நடிக்கும்போது நீ ஏன் நடிக்கக்கூடாது என்று கேட்டார்.இவ்வாறு பலநேரங்களில்,பல விதங்களில் எனக்குள் ஒரு ஆசை எழுப்பப்பட்டது.திரைத்துறையில் புகுந்திருந்தால் பெரிய  நடிகனாயிருப்பேனோ? அவ்வாறு ஏன் நடக்கவில்லை?இழப்பு யாருக்கு????

3)பட்டமேற்படிப்புக்குப்பின் சிறிது காலம் வருமான வரித்துறையில் பணியாற்றி வந்த போது ஐ.ஏ.எஸ் படிப்பதில் தீவிரமாக இருந்தேன்.நன்கு தயார் செய்து கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் வங்கிப்பணிக்கான அழைப்பு வந்தது.செல்ல வேண்டாம் என்று எண்ணினேன்.என் அண்ணாஅவர்களும் ஆமோதித்தார்.ஆனால் போக வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக வங்கிப்பணிக்குச்செல்லும்படி என் அண்ணா அறிவுரைத்தார்.அவரும் ஒரு வங்கி அதிகாரிதான்.வங்கியில் சேர்ந்து விட்டேன்.ஐ.ஏ.எஸ் அதோடு முடிந்தது. ஏன் எண்ணப்படி நடக்கவில்லை?இழப்பு யாருக்கு?????

முதல் கேள்விகளுக்கு விடை1.குடும்ப சூழ்நிலை2.Risk(த்மிழ் என்ன) எடுக்கத்துணியாத நடுத்தர வர்க்க மனோ பாவம்(சுருக்கமாக விதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமா)

இரண்டாவது கேள்விகளுக்கான விடை;-இழப்பு அரசியலுக்கு,திரைப்படத்துறைக்கு,அரசுப்பணிக்கு என்று சொல்வேன் என எண்ணினீர்களா?இல்லை எனக்குத்தான்.

இதைப்படித்து விட்டு நான் வாழ்க்கையில் திருப்தியின்றி இருந்திருக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

என் பணியிலும் நான் மகிழ்வுடன்தான் இருந்தேன்.இது வரை வாழ்க்கையை முழுமையாகவே வாழ்ந்திருக்கிறேன்.

எல்லாம் இறைவன் செயல். 

2 Comments »

நானும் காமிராவும்

சமீபகாலமாக சில பதிவுகளில் கண்ட புகைப்படங்கள் என்னுள் ஒரு பொறாமையை ஏற்படுத்துகின்றன.எத்தனை ஆண்டுகளானலும் என்னால் ஆளுமைப்படுத்தமுடியாத ஒன்று புகைப்படக்கலை.

நான் பட்டப்படிப்புப் படித்து வந்த போது ஒரு வீட்டு விசேடத்துக்காக என் நண்பர் ஒருவரிடம் காமிரா இரவல் வாங்கி(agfa foldable)ப் படம் எடுத்துத்தள்ளினேன்.கடைசியாக எல்லாப்படங்களிலும் உருவங்கள் பாதியாகவோ அல்லது கலங்கியோதெரிந்தன.

எனது அடுத்த முயற்சி சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது.நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்ற போது என் நண்பர் காமிராவை என் கையில் கொடுத்து அனைவரையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்கச்சொன்னார்.யானை முன்னால் அவர்கள் நின்ற படத்தில் அவர்கள் தலைகள்,யானையின் தலை மட்டுமே தெரிந்தது.அதன் பின் எங்கு சென்றாலும் காமிரா என் கைக்கு வராமல் பார்த்துக்கொண்டனர்.

பின்னர் சென்னையில் பணி புரியும்போது பர்மா பஜாரில் ஒரு யாஷிகா காமிரா வாங்கினேன்.குடும்பத்துடன் காஷ்மீர் செல்லும்போது டில்லி செங்கோட்டையில் காமிராவை கீழே போட்டு அது சிறிது வாய் பிளந்து கொள்ள பயணத்தில் ஒரு படமும் எடுக்கவில்லை.அதோடு முடிந்தது என் புகைப்பட நிபுணராகும் ஆசை.அந்தக் காமிரா எங்கோ கிடக்கிறது.

என் காமிரா ராசி நான் படம் எடுக்கும்போது மட்டுமன்றி நான் எடுக்கம்படும்போதும் இயங்குகிறது.

துபாய் சென்ற போது என் மருமகன் பல இடங்களில் என்னையும் என் மகளையும் ‘க்ளிக்கினார்.புறப்படுவதற்கு முன் தினம் பிரிண்ட் எடுத்த போது அதில் ஒன்றுமே இல்லை.மிகப் பழைய fஇலிம் என்று ச்டூடியோக் காரர் சொல்லிவிட்டார்.

காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை.

3 Comments »