ரஜினியால் அரசியல் தலைவராக முடியாது
Aug 6th 2008pithanநிகழ்வுகள்
இப்போது சர்ச்சைக் குரிய நபராக ஆகியிருக்கிறார் ரஜினி.எப்போதுமே அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது பற்றிப் பல விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.அவரால் ஒரு அரசியல் தலைவராக முடியுமா?
முன்பு ஒரு முறை தி.மு.க. கூட்டணியை அவர் ஆதரித்த நேரத்தில்,அ.இ.அ.தி.மு.க.சார்பில் மேடைகளில் பேசிய மனோரமா அவர்கள் ரஜினி பற்றிக் கேவலமாகப் பேசினார்.ரஜினிக்கு உண்மையாக அரசியல் தலைவர் ஆகும் தகுதி இருந்திருந்தால், “ மறப்போம்,மன்னிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே, மனோரமாவின் திரையுலக வாழ்க்கையை அவர் முடித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல,தொடர்ந்து மனோரமாவுக்குத் தன் படங்களில் வாய்ப்பும் அளித்தார்.இவரால் எப்படி ஒரு அரசியல் தலைவர் ஆக முடியும்?!
தற்போதைய பிரச்னையை எடுத்துக் கொள்வோம். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் நலங்கருதி,அவர் வருத்தம் தெரிவித்தது(மன்னிப்பு அல்ல) காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் ஒரு பெரிய பிரச்சினை ஆக்கப்பட்டு விட்டது.கோவை நகரில் இவர் பட பானர்கள் கிழிக்கப்பட்டன. இவருக்கு அரசியல் தலைவர் ஆவதற்கான தகுதி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?பிரச்சினையை ஆரம்பத்திலேயே திசை திருப்பி, இரு மாநில மக்களுக்கும் மோதலை உருவாக்கி அந்த நெருப்பில் குளிர் காய்ந்திருக்க வேண்டும். இவருக்கு எதிர்ப்பு ஒருவான வுடனே ஒரு அறிக்கை வெளியிட்டு த் தம் ரசிகர்கள் அமைதி காத்திட வேண்டும்,கோபத்தின் காரணமாக வன்முறையில் இறங்கிப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்திடக் கூடாது என்றெல்லாம் கூறி மறைமுகமாக அவர்களைத் தூண்டி விட்டிருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் செய்யாமல் வெளிப்படையாகப் பேசி மற்றவர் நலனை மனத்தில் கொண்டு செயல் பட்டு பிரச்சினையில் சிக்கிவிட்டார்.இவரால் எப்படி ஒரு அரசியல் தலைவராக முடியும்?(பிரச்சினைகளை உருவாக்க வேண்டும், அவற்றில் மாட்டிக் கொள்ளக்கூடாது)
எனவேதான் சொல்கிறேன்,ரஜினி என்றுமே சூபர் ஸ்டார்தான்,சூபர் மனிதர்தான் சூபர் தலைவராக முடியாது!!
” மேரா பாரத் மஹான்!”