Archive for the 'சில நினைவுகள்' Category

கும்பமேளா

சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதல் மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட முடிந்தது.

        இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும்.   முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின் நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணிகளுடன் வந்து,கிடைத்த இடத்திலே தங்கி(பல நேரங்களில் வானமே கூரை)அந்த நடுக்கும்  குளிரையும்  பொருட் படுத்தாமல்  தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி புரிந்து வந்தவன் நான்.)

   அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.

            12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் எங்கிருந்தெல்லாமோ வரும் சாதுக்கள்கூட்டம்.

   இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும், கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி-அந்தத் திருவிழாவுக்குத்  தங்கள் வயதான  தாய்/தந்தையுடன்  வந்த சிலர் அந்தக் கூட்டத்தில்   அவர்களைத் தனியே தவிக்க  விட்டுச்  சென்று விட்ட  கொடுமை!எழுத்தறிவற்ற பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி,உறவினர் பற்றி எந்தத்தகவலும் கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில் நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில் ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக் கூட அநாதையாக விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள் வறுமை?என்ன செய்யப் போகிறோம் நாம்?                                                                              

“ஜகத்தினை அழிக்கலாமா?!”

No Comments »

இது நட்பா,காதலா?(இறுதிப் பகுதி)

மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து    ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள்.       அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம்.  இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம்.       மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.

                   வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக்கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே,கிருஷ்”பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து  அமர்ந்துகொண்டோம்.           அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள்  குடும்பமாக  பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள்   நான்  அவள் முகத்தையே பார்த்துக்  கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால  நினைவுகளில்   சஞ்சரிப்பதைப் புரிந்து  கொண்டேன் .இதுதான் சரியான நேரம்.கேட்டு  விடலாம் .

  “மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”           

     ”உம்”எங்கோ லயித்தபடி மேரி.

     “திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”

     அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன்.கேட்டால்  எப்படிப்  பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில்,ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”

    நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”

   ” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக்  கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச்  சிறிது  நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.”செய் ,மேரி”

 அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள்.சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக்  கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு  பாசம் வைத்திருந்தால்  ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.

 அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”

  ” எழுப்ப மனம் வரவில்லை மேரி”

    “சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.

   மறு நாள் காலையில்  அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை  பேசுகிறேன். ”

      அவள்  முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி  நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில்  பிரபலமான இரு  பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”

        நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன்   பணியில்  வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம்  திரும்ப  நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”

    மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

    நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன். 

                             –x–x–x–x-x–x

           ஒரு மாதத்துக்குப் பின் அமெரிக்காவின் டல்லஸ் நகர உள்ளூர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி-”நேற்று நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு கார் ஒட்டுநரும் காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அந்தப் பெண் ஒரு இந்தியர்.பெயர் மேரி தாமஸ்”

          இது ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாது. அவன் மேரியின் வெற்றிக்காகப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பான்.அவள் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டே இருப்பான்.அவன் அப்படியே இருக்கட்டும்.

2 Comments »

இது நட்பா,காதலா?(இரண்டாம் பகுதி)

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு  பணிக்காக டில்லி சென்று விட்டதாகத்  தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை  இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தி விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

          அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது.சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள். 

       அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என்னெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு  வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம்  சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம்  தரையிறங்கிய  அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான்.இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது.அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை.அவள் நடையில் நளினமும், கம்பீரமும்  கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வூர்தியை!(கார்) நோக்கி நடந்தோம்.கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”

   “என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி

  ” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”

        அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”

     ” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”

    “பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”

    வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள்  ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும்  ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.

  என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”

       உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”

       “அப்படியென்றால்–?”

        ” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை.பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”

  அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”

   அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.

    “சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”

  ” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”

    சிறிது நேரத்தில் அவள்       புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப்  பேசலாம் ”

        வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலை யிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

2 Comments »

இது நட்பா,காதலா?(முதல் பகுதி)

தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்,”ஹரி ஓம்,ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்”.மறுமுனையிலிருந்து குரல்”ஹாய்,கிருஷ்!என்ன இது ஹரி ஓம் எல்லாம்?யாரென்று தெரிகிறதா?’

     என் கடவுளே!இது அவள்தான்.என் வாழ்க்கையில் என்னைக் கிருஷ் என்று அழைத்திருக்கும் ஒரே நபர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின்!மேரி!மேரியேதான். ”மேரி!என்ன சுகமான அதிர்ச்சி!அன்று போலவே இன்றும் உன் குரல் இனிமையாகவே இருக்கிறது.எங்கே இருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?திடீரென்று என்ன தொலை பேசுகிறாய்?”

        ” மெள்ள, மெள்ள,கிருஷ்!எல்லாக்கேள்விகளுக்கும் இப்போதே பதில் சொல்லி விட்டால் நாளை நேரில் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.”

       ” நேரில்?நீ சென்னை வருகிறாயா?உண்மையாகவா”

          “ஆம்.நாளை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறேன்.காலை 10.30க்கு விமானம் தரையிறங்கும்.விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவாயா?”

          “நிச்சயமாக.மகிழ்ச்சி என்னுடையது.”

          “கிருஷ்!நான் இரண்டு நாள் தங்குவதற்கு ஏதாவது நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்து விடு”

         “அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ வா”

         இருவரும் தற்காலிக விடை பெற்றுக் கொண்டோம்.                                                                                                 tholaipeesiyaiyai

          தொலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன்.என் மனம் கடந்த காலத்துக்குச் சென்றது.அந்த நாட்கள்………….

           அந்த வங்கியில் அதிகாரியாக நியமனம் பெற்று அன்று எங்கள் பயிற்சி ஆரம்பம்.ஓராண்டுப் பயிற்சியில் முதல் இரண்டு மாதங்கள் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள்.பயிற்சி இயக்குனரிடம் என் வருகையை அறிவிக்க அவர் வகுப்புகள் நடக்க இருக்கும் ‘போர்டு’ அறைக்கு என்னைப் போகச் சொன்னார்.கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.ஏ.சி யின் குளிர் என்னைத் தாக்கியது.வெளியே மழை விடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது இது வேறா?உள்ளே ஒரு மேசையில் வங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பெண் திரும்பி என்னைப் பார்த்தாள்.இயல்பான புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

     தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.” நான் மேரி தாமஸ்.”குலுக்குவதற்காகக் கையை நீட்டினாள்.

    கையைப் பற்றிக் குலுக்கியவாறே சொன்னேன்  ”நான் ராதாகிருஷ்ணன்.”-முதல் முதலாக ஒரு பெண்ணின் கை பற்றிக் குலுக்கும் அனுபவம்.என்ன மென்மையான கரம்!

    “நீங்கள் பெங்களூரா?பார்த்த முகமாகத் தெரிகிறது”-அவள் கேட்டாள்.”இல்லையில்லை.நான் மெட்ராஸைச்சேர்ந்தவன்.இன்று வரை பெங்களூர் சென்றதேயில்லை”-என் பதில்.நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்கள் வரத்துவங்கினர்.அறிமுகப் படலம் ஆரம்பமாயிற்று.20 பேரில் எட்டுப் பேர் தமிழர்கள்.

       சிறிது நேரம் சென்று பயிற்சி இயக்குனர் வந்து எங்களையெல்லாம் இருக்கையில் அமரச்சொன்னார்.பெரிய மேசையைச்சுற்றி இருபது இருக்கைகள்.இடது புறம் முதல் இருக்கையில் சுகுணா என்ற தமிழ்ப் பெண்.அடுத்து மேரி.அவள் அமர்ந்து என்னைப் பார்த்தாள்.நான் சிறிதே தயங்கும் போது ஆந்திர நண்பர் ஒருவர் அமர்ந்து விட்டார்.மேரியின் உதடுகளில் ஒரு புன்முறுவல்-என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து என நினைத்தேன்.அடுத்த இருக்கையில் நான்.

      ஆரம்ப விழா,பின் வகுப்புகள் தொடங்கின.நான் இடையிடையே கேட்ட கேள்விகள்  பாராட்டப்பட்டன.ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்த மேரியின் முகத்தில் வியந்து பாராட்டும் ஒரு பாவனை.-அது மேலும் எனக்கு ஊக்கம் அளிப்பதாயிருந்தது.அன்று மாலை வகுப்புகள் முடிந்த பின் மேரி சொன்னாள்”நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், மிஸ்டர்.ராதாகிருஷ்ணன்.ஓ! ஒவ்வொரு முறையும் உங்களை முழுப்பெயரில் அழைப்பது கஷ்டமாயிருக்கிறது.”

     நான் சொன்னேன்”சுருக்கமாக ராதா என்று அழையுங்களேன் மிஸ்.தாமஸ்.என் நண்பர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்”

    “எனக்குப்பிடிக்கவில்லை.ஒரு பெண்ணை அழைப்பது போல் இருக்கிறது.உங்களை ‘கிருஷ்’என்று அழைக்கிறேன்.ஆனால் இந்த மிஸ் தாமஸ் எல்லாம் வேண்டாம்.நீங்கள் என்னை வெறும் மேரி என்றுதான் அழைக்க வேண்டும்” நான் குறும்பாகச்சொன்னேன்”சரி,வெறும் மேரி”.அவள் ’குபீர்’என்று சிரித்துப் பின் சொன்னாள் “நீங்கள்  மிகவும் குறும்புக்காரர்”

    ” சரி,மேரி,நண்பர்களுக்குள் என்ன மரியாதை?இந்த நீங்கள்,நாங்கள் எல்லாம் வேண்டாமே.”அவள்சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.(ஆங்கிலத்தில் நீ,நீங்கள் என்பதற்கு வேறுபாடு இல்லாவிட்டாலும் பேசுகின்ற தொனியில் அதைப் புரிந்து கொள்ளலாம்.)

     ஆக,முதல் நாளே நாங்கள் நெருங்கிவிட்டோம்.மறு நாள் முதல்,வகுப்பு தொடங்குமுன்,இடை வேளையில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.எங்களுக்கு நடுவில் அமர்ந்த நபர் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால் முன்னே சென்றும்,அவர் முன்னால்   சாய்ந்தால்  நாங்கள் பின் சென்றும் பேசிக்  கொண்டிருப்போம் .சில மாலைகளில் அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி நேரம் போவது  தெரியாமல் பேசுவோம். திடீரென்று  வரும் மழையில் நனைந்த படித்  திரும்புவோம் .எங்களுக்குப் பேசுவதற்கு  எவ்வளவோ இருந்தது-எங்கள் இளமைப் பருவம்,கல்வி,கல்லூரி வாழ்க்கை,குடும்பம் இப்படி.சில சமயம் என் தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்.நான் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவேன்.ஏதோ சில காரணங்களால் நாங்கள் ஒருவர் பால் மற்றவர் அதிகமாக ஈர்க்கப்பட்டோம்.

            ஒரு நாள் அவள் கேட்டாள்”யாரையாவது காதலித்திருக்கிறாயா,கிருஷ்?”

           அப்போதுதான் நான் அவளிடம் என் ரயில் காதல் பற்றிச் சொன்னேன்.கேட்டுவிட்டு அவள் சொன்னாள்”அந்தப் பெண் உன்னை மிகவும் பாதித்திருக்கிறாள் என்று உணர்கிறேன்.ஏன் கிருஷ் அவளைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நீ எடுக்கவில்லை?திருச்சியில் அவளைத் தேடிப் பார்த்திருக்கலாமில்லையா?”

    நான் சொன்னேன்”பயம்,மேரி.என் நடுத்தர வர்க்கத் தற்காப்பு மனப்பாங்கு.வாழ்க்கை பற்றிய பயம்.”

    அவள் முகத்தில் லேசாகக் கோபம் தோன்றியது.”இந்த விஷயத்தில் உன் நடத்தை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது”.

    நிலைமையைச் சரியாக்க நான் வினவினேன்”நீ எப்படி மேரி?ஏதாவது காதல்?’”

     சிறிது இறுக்கம் தளர்ந்தவளாய் அவள் பதிலளித்தாள்.”இல்லை.இன்றுவரை என் கற்பனை ராஜகுமாரனை நான் சந்திக்கவில்லை.”நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.அந்தப் பளிங்கு முகத்தில் பொய்மை இல்லை;கள்ளம் இல்லை.

நடுவில் ஒரு நாள் எங்களுடன் பயிற்சியில் இருந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவருக்குத் திருமணம்.அருகில் இருந்த ஓர் ஊர் மாதா கோவிலில் மாலை திருமணம்;பின் ஓட்டலில் வரவேற்பு.மேரிக்கு வேறு அலுவல் இருந்த காரணத்தால்  வர இயலவில்லை.எனக்கு ஏமாற்றந்தான்.நாங்கள் ஆண்கள் மட்டும் சென்றோம்.அந்தக் கலாசாரமே புதிதாக இருந்தது.திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணின் கையில் எல்லோரும் முத்தமிட்டோம்!பின் வரவேற்பில் ஆண் பெண் எல்லோரும் கட்டிப் பிடித்து ஆடினார்கள்.நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.பல வித பானங்கள்,சைவ-அசைவ விருந்து(பஃபே) என்று எல்லாமே எனக்குப் புதிதான அனுபவங்கள்.

     மறுநாள் மேரி கேட்டாள்”எப்படி இருந்தது கிருஷ், திருமணம்?”

    “எனக்கு  ஒரு கலாசார அதிர்ச்சி.எல்லாமே ஒரு புதிய அனுபவம்”-நான் .

   ” நடனம் இருந்ததா? நீ நடனமாடினாயா”

     நான் சிரித்தேன்.”நானா?நடனமா?நடக்கவே முடியாது.நடனத்தைப் பொருத்தவரை நான் ஒரு பூஜ்யம்.”

    ” நான் கற்றுத்தரட்டுமா?”ஆர்வமாய்க் கேட்டாள்

“அய்யய்யோ!ஆளை விடு.என்னால் முடியாது”.அவள் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தின் சாயல் பரவி மறைந்ததோ?நான் அவளை ஏமாற்றி விட்டேனோ?தெரியவில்லை.

    பயிற்சிக்காலம் முடிந்து புறப்படும் நாள் வந்தது.எல்லோரும் மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.நானும் மேரியும் ஒன்றும் பேசாமலே அலுவலக வாசல் வரை நடந்து வந்தோம்.அங்கு நின்றோம்.நான் மேரியின் கைகளைப்பற்றிக்கொண்டு சொன்னேன்”இந்தப் பயிற்சிக் காலத்தை இனிமையாக்கியது உன் தூய   நட்புதான் மேரி.அந்த நினைவுகளுடனே பிரிகிறேன்.தொடர்பில் இருப்போம்.மீண்டும் சந்திப்போம்”ஒரு மெலிதான சோகம் என்னுள் பரவியிருந்தது.மேரியின் அழகிய கண்கள் கலங்கியிருந்தன.”சென்று வருகிறேன்,கிருஷ்.இறைவன் நமக்குத் துணையிருக்கட்டும்.”

பிரிந்தோம்.எங்கள் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது.எங்கள் அலுவலக வேலையின் பளு,எங்கள் இன்ப நிகழ்வுகள் ,சோகங்கள் எல்லவற்றையும் கடிதங்களில் பகிர்ந்து கொண்டோம்.

  ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது-விமானப்படையில் பணி புரிந்து வந்த அவள் அண்ணன் ஒரு ‘மிக்’விமான விபத்தில் இறந்த செய்தியைத்தாங்கி.அவள் மிகவும் உடைந்து போயிருந்தாள்.அவள் அண்ணனை மிகவும் நேசித்தவள்.அவளுக்கு  ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு கடிதம் எழுத நீண்ட நேரம் யோசித்தேன்.பல எண்ணங்கள் என்னுள் அலை மோதின.கடைசியில் எழுதினேன்”அன்பு மேரி.இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.உன் அண்ணன் இடத்தில் நான் இருக்கிறேன்.உன் வாழ்நாள் முழுதும் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.”

   அவளிடமிருந்து பதில் வரவில்லை.மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன்.அதற்கும் பதில் இல்லை.அவள் பணி புரிந்த வங்கிக் கிளைக்கு  தொலை பேசினேன். அவளை அழைப்பதாக யாரோ சொன்னார்கள்.பல நிமிடக் காத்திருப்புக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடன் தொடர்பு  கொள்ள  நான் செய்த முயற்சிகள் அனத்தும் பலனற்றுப் போயின.பெங்களுர் சென்று அவளைப் பார்க்க முடியாமல் என்னுள் ஏதோ ஒரு உணர்வு.(குற்ற உணர்ச்சி?)

           எங்கள் தொடர்பு அற்றுப் போயிற்று .                                                          (இன்னும் வரும்)

2 Comments »

எங்கிருந்தாலும் வாழ்க

பெண்ணே!(கண்ணே என்றழைக்க மனம் விழைந்தாலும்,நாகரிகம் தடுக்கிறது);நீ எங்கே இருக்கிறாய்?இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை.

  அந்த நாள்,உனக்கு நினைவிருக்கிறதா ?நாம் சந்தித்த நாள்.என்னைப் போல் நீயும் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டா.(மறந்தாலன்றோ நினைப்பதற்கு)

         திருச்சி இரயில் நிலைய்த்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டியில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத்தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

        இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை.என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.

       சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம்  பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள்  ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் நீ அணிந்திருந்த மூக்குத்திகள்  .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

          நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத்துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க  ஆரம்பித்தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

               மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ  பார்த்துக்  கொண்டிருக்கிறாய்  என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக  உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்  என்று.புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும்  உணர்வுகளை.

            மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது                             விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும்  போதெல்லாம்.  அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம்  நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.

               நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்”    என்றவாறே .நீ                                   அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் “ராதாகிருஷ்ணன்,M.A.”கொஞ்ச நேரம் பேப்பரைப்   புரட்டி  விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய்  “மெட்ராசில்  பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும்  கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

      ஒரு ஸ்டேஷனில் வண்டி  நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று  திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த   என்னைப் பார்த்தபின்      எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு ,சாதனைகள் படைக்க.

           சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம்   பிரிய   வேண்டிய  நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல்  பார்த்துக்கொண்டே இருந்தோம் . 

           சென்னை வந்து விட்டது.எல்லோரும்         பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன.மெல்லக்கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என்மனதையும் எடுத்துக்கொண்டு.

       நீ சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.உன்னைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன்.காலம் என்னும் மருத்துவன் என்னைச் சரியாக்கினான்.ஆனால் உள்ளே அந்த சோகம் புதைந்துதான் கிடக்கிறது,இன்று வரை.

              நீ எங்காவது கணவன்,பிள்ளைகள்,பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாய்.நீ இருக்கும் இடத்தைச் சிறப்படையச் செய்து கொண்டிருப்பாய் என்பதில் ஐயம் இல்லை.

           ஒரு கவிஞன் பாடினான்”சந்தனக் காடுகள் பற்றி எரிகையில் சந்தனமே மணக்கும்;என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.அது போல என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்தான் என் நெஞ்சோடு சேர்ந்து உன் நினைவும்  வேகும். 

   பின்னூட்டங்கள்

1) ராதா said;

         அன்புள்ள ராதாகிருஷ்ணன்,தற்செயலாக உங்கள் பதிவைப்படித்தேன்.என்னைப் போலவே  நீங்களும் அந்த நாளை இன்னும்  மறக்காதிருக்கிறீர்கள் என்றறியும் போது உள்ளம் நிறைந்து போனது.நமது சந்திப்பு பற்றி என் கல்லூரித்தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் இதெல்லாம் உங்களுக்கு பொழுது போக்குக்காக  செய்திருப்பீர்கள் என்றுசொல்ல நான் அவர்களிடம் சண்டையிட்டேன்.எனக்குத் தெரியும் ஏதோ வலுவான காரணங்களால்தான் நீங்கள் என்னைத் தேடி வரவில்லையென்று.இப்போது  ஆண்டுகள் பல கடந்து விட்டன.நானும் ஒரு பொறுப்பான குடும்பத்தலைவியாய்,அன்பான  கணவன்,ஆதரவான குழந்தைகள்,என்று  மகிழ்ச்சியாய்  வாழ்கிறேன்.நீங்களும் அதே போல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது நிச்சயம்.அடுத்த இடுகையில் உங்கள் மகிழ்ச்சியான குடும்பம் பற்றி எழுதுங்களேன்.

உங்கள் அன்புள்ள  

ராதா விச்வனாதன்

2) கடவுள் said: 

            இந்தப் பின்னூட்டம் ராதாகிருஷ்ணன்,ராதா  இவர்களுக்குத் தெரியாது.மற்றவர்களுக்கு மட்டுமே  தெரியும் .

        ராதா பொய் சொல்கிறாள்.அவள் மகிழ்ச்சியாக இல்லை.அன்பில்லாத முரட்டுக் கணவன்,அடங்காத      பிள்ளைகள்.அவள் வாழ்க்கையே நரகம்தான்.  ராதாகிருஷ்ணன்  எழுதுவான்,தன் சந்தோஷமான வாழ்க்கை பற்றி. அதுவும்   பொய்தான்.அவன் வாழ்க்கையும்  சோகமயமானதுதான்.இருவரும் அடுத்தவர் மகிழ்வுக்காகப் பொய் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்க்கை  சொர்க்கமாக இருந்திருக்கும்.அனால் நான் அப்படி(விதி) எழுதவில்லையே.

[(பி.கு) மேலே கண்ட பின்னூட்டங்கள் இடுகையின் பகுதியே தவிர உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.கடவுள் என்பது உண்மையான கடவுளையே குறிக்கும். let there not be any confusion ]                                                                              

14 Comments »