Archive for August, 2008

இன்று

கேட்டது கிடைக்காதபோது
அம்மா அடித்தபோது
காலில் அடி பட்டபோது
வயிறு வலித்தபோது
கைகால் உதைத்து அழுததுண்டு!
   இன்று முடியுமா?

பள்ளியிலிருந்து திரும்பும்போது
கடை கண்ணிக்குப் போகும்போது
நண்பர்களுடன் களிக்கும்போது
கார் ஓட்டுவது போல்’புர்ர்ர்’எனச்சத்தமிட்டு
ஸ்டியரிங் ஒடிப்பது போல் கைகளால் அபினயித்து
‘பூம்,பூம்’ என ஹார்ன் அடிப்பது போல் நடித்து
சாலையில் வேகமாய் ஓடியதுண்டு.
    இன்று முடியுமா?

இப்படி எத்தனையோ!
ஆனால் இன்று?

விரும்புவது கிடைப்பதற்கு 
விரும்பத்தகாத செய்கிறேன்!
இல்லாதது இருப்பது போல்
நடித்து ஏமாற்றுகிறேன்!
 

அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல்
  இந்நான்கும் இன்று என்னுடன்!
என் வசம் இல்லாத புலன் ஐந்துக்காய்
  எதையும் செய்யத்துணிகிறது மனசு!.

இன்று நான் விவரம் தெரிந்தவன்! 

No Comments »

குசேலன் -ஒரு புதிய பார்வை

குசேலன்!
உற்பத்தியில் மன்னன்!மொத்தம் 27!
கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
விற்றது என்னவோ வெறும் அவல் கையளவுதான்
       ஆனால் விலையாய்ப்
பெற்றது எத்துணை செல்வம்!அம்மம்மா! 

2 Comments »

ரஜினியால் அரசியல் தலைவராக முடியாது

இப்போது சர்ச்சைக் குரிய நபராக ஆகியிருக்கிறார் ரஜினி.எப்போதுமே அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது  பற்றிப் பல விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டு   வந்திருக்கின்றன.அவரால் ஒரு அரசியல் தலைவராக முடியுமா?

            முன்பு ஒரு முறை தி.மு.க. கூட்டணியை அவர் ஆதரித்த நேரத்தில்,அ.இ.அ.தி.மு.க.சார்பில் மேடைகளில் பேசிய மனோரமா அவர்கள் ரஜினி பற்றிக் கேவலமாகப் பேசினார்.ரஜினிக்கு உண்மையாக அரசியல் தலைவர் ஆகும் தகுதி இருந்திருந்தால், “ மறப்போம்,மன்னிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே, மனோரமாவின் திரையுலக வாழ்க்கையை அவர் முடித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல,தொடர்ந்து மனோரமாவுக்குத் தன் படங்களில் வாய்ப்பும் அளித்தார்.இவரால் எப்படி ஒரு அரசியல் தலைவர் ஆக முடியும்?!

           தற்போதைய பிரச்னையை எடுத்துக் கொள்வோம். தயாரிப்பாளர்கள்,   வினியோகஸ்தர்கள்  , திரை அரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் நலங்கருதி,அவர் வருத்தம் தெரிவித்தது(மன்னிப்பு அல்ல) காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் ஒரு  பெரிய பிரச்சினை ஆக்கப்பட்டு விட்டது.கோவை நகரில் இவர் பட பானர்கள் கிழிக்கப்பட்டன. இவருக்கு அரசியல் தலைவர் ஆவதற்கான தகுதி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?பிரச்சினையை ஆரம்பத்திலேயே திசை திருப்பி, இரு மாநில மக்களுக்கும் மோதலை உருவாக்கி அந்த நெருப்பில்  குளிர் காய்ந்திருக்க  வேண்டும்.  இவருக்கு எதிர்ப்பு ஒருவான வுடனே ஒரு அறிக்கை வெளியிட்டு த் தம் ரசிகர்கள் அமைதி காத்திட வேண்டும்,கோபத்தின் காரணமாக வன்முறையில் இறங்கிப் பொதுச் சொத்துக்களுக்குச்  சேதம் விளைவித்திடக் கூடாது என்றெல்லாம் கூறி மறைமுகமாக அவர்களைத் தூண்டி விட்டிருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் செய்யாமல் வெளிப்படையாகப்  பேசி மற்றவர் நலனை மனத்தில் கொண்டு செயல் பட்டு பிரச்சினையில்   சிக்கிவிட்டார்.இவரால் எப்படி ஒரு அரசியல் தலைவராக முடியும்?(பிரச்சினைகளை உருவாக்க வேண்டும், அவற்றில் மாட்டிக் கொள்ளக்கூடாது)

                                                                                                                                      எனவேதான் சொல்கிறேன்,ரஜினி என்றுமே சூபர் ஸ்டார்தான்,சூபர் மனிதர்தான் சூபர் தலைவராக முடியாது!!

         ” மேரா பாரத் மஹான்!”

                                                                                             

No Comments »

கும்பமேளா

சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதல் மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட முடிந்தது.

        இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும்.   முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின் நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணிகளுடன் வந்து,கிடைத்த இடத்திலே தங்கி(பல நேரங்களில் வானமே கூரை)அந்த நடுக்கும்  குளிரையும்  பொருட் படுத்தாமல்  தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி புரிந்து வந்தவன் நான்.)

   அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.

            12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் எங்கிருந்தெல்லாமோ வரும் சாதுக்கள்கூட்டம்.

   இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும், கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி-அந்தத் திருவிழாவுக்குத்  தங்கள் வயதான  தாய்/தந்தையுடன்  வந்த சிலர் அந்தக் கூட்டத்தில்   அவர்களைத் தனியே தவிக்க  விட்டுச்  சென்று விட்ட  கொடுமை!எழுத்தறிவற்ற பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி,உறவினர் பற்றி எந்தத்தகவலும் கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில் நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில் ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக் கூட அநாதையாக விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள் வறுமை?என்ன செய்யப் போகிறோம் நாம்?                                                                              

“ஜகத்தினை அழிக்கலாமா?!”

No Comments »