நானும் ஒரு குரு !
May 7th 2008pithanUncategorized
சமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.
இவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.
ஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்?இவர்களிடம் என்ன இருக்கிறது?
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-
1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.
2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.
3.பேச்சுத்திறமை.
நான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்
1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.
2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா?)
3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.
4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல)
எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!
(நமிதா ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை.நமிதா என்னிடம் பயிற்சி பெற்று ஒரு பயிற்சியாளராக மாறி அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் காலம் வரலாம்!அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)